சாளக்ராமத்தின் கற்கள் மகத்துவம்

ஆலயங்களில் உள்ள விக்ரகத்தை காட்டிலும் அதிக மடங்கு விரைவில் பலன்கள் தரும் சாளக்ராமத்தின் கற்கள்.
 சாளக்ராமத்தின் பெருமைகள் அளவிடற்கரியவை. விக்ரஹ ஆராதனையைவிட சாளக்ராம பூஜையினால் அதிக திருப்தியை திருமால் அடைவதாக விவரம் தெரிந்த ஸ்ரீவைஷ்ணவப் பெரியோர்கள் கூறுகின்றனர். இமயமலை அடிவாரத்தில் பாய்கின்ற "கண்

சாளக்ராமத்தின் பெருமைகள் அளவிடற்கரியவை. விக்ரஹ ஆராதனையைவிட சாளக்ராம பூஜையினால் அதிக திருப்தியை திருமால் அடைவதாக விவரம் தெரிந்த ஸ்ரீவைஷ்ணவப் பெரியோர்கள் கூறுகின்றனர்.

இமயமலை அடிவாரத்தில் பாய்கின்ற "கண்டகி' நதியில், சாளக்ராம (கல்) வடிவில், ஸ்ரீ விஷ்ணுவே அவதரிக்கின்றார்.

எனவே இது "ஸ்வயம் வியக்தம்' (சுயம்பு) எனப்படுகிறது. "ஹரி பக்தி விலாசம்' என்னும் புனித நூல், "எல்லோரும் சாளக்ராம பூஜை செய்யலாம்' என்று உறுதியளிக்கின்றது. "உடைந்த சாளக்ராமம்கூட பூஜிக்கத் தக்கதே' என "பிரம்ம புராணம்' கூறுகின்றது.

"சாளக்ராமத்துக்கு அபிஷேகம் பண்ணிய தீர்த்தத்தை பருகுவதால் வியாதிகள் தீரும்; சாளக்ராமம் உள்ள வீட்டை துஷ்ட சக்திகள் அணுகாது' என்றெல்லாம் பல நூல்களில் பல்வேறு விதங்களில் சாளக்ராம மஹிமை புகழப்படுகின்றது.

ஆனால் அதே புனித நூல்கள், சாளக்ராம பூஜை பற்றி சில கடுமையான விதிகளையும் கூறுகின்றன. ஏனோ அவை பெரும்பாலான ஆர்வலர்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை. இதற்கு உதாரணமாக, ஆகாய விமானப் பயணத்தைச் சொல்லலாம்.

பேருந்திலோ, ரயிலிலோ பல மணி நேரங்கள் பயணிக்க வேண்டிய தூரத்தை, மிகக் குறைந்த நேரத்தில் விமானங்கள் கடந்துவிடுகின்றன. அதில் பறக்கின்றவர்களுக்கு அந்தக் "குறைந்த நேரம்' என்பது மட்டுமே நெஞ்சில் நிலைக்கிறது; அப்படிப்பட்டவர்கள் விமானம் புறப்படும் முன்னர், விமானப் பணிப் பெண்கள் சைகைகளோடு விளக்கிக் கூறும் "பாதுகாப்பு விதிகளை' பார்க்கவோ, கேட்கவோகூட மாட்டார்கள்.

ஆனால் ஆபத்து வந்தால் மட்டும் அலறுவார்கள். "சாளக்ராம பூஜை' விஷயத்திலும் இப்படித்தான் ஆகிறதோ என்று ஐயப்படத் தோன்றுகிறது.

சாளக்ராமத்தை பூஜை செய்வதால் ஏற்படும் நற்பயன்களைப் பற்றிக் கேள்விப்பட்டு பிரமித்துப் போய்விடும் மக்கள், "பாதுகாப்பு விதிகள்' பற்றிக் கண்டு கொள்வதேயில்லை. இது ஒரு துரதிருஷ்டம். லட்சணமுள்ள சாளக்ராமங்கள் மட்டுமே வழிபாட்டிற்கு உரியவை; மற்றவை விபரீத பலன்களைத் தரக்கூடும். இங்கே சில விதிமுறைகளைக் காண்போம்.

"சாளக்ராமத்தை விற்பதோ, விலைக்கு வாங்குவதோ தகாது' என்று "ஸ்காந்த புராணம்' தெளிவாகக் கூறுகின்றது. நல்ல சீலமுடைய பெரியோர்களிடமிருந்து சாளக்ராமம் பெற விண்ணப்பித்து, அவர்கள் கையால் சாளக்ராமத்தை விலையின்றி பெற்று பூஜிப்பதே சிறந்தது. அக்காலத்தில் "கண்டகி' பாயும் "முக்திநாத்' தலத்துக்குச் செல்லும் பெரியோர்கள், அங்கே நதிப்படுகையில் எளிதில் கிடைக்கும் சாளக்ராமங்களை லட்சணங்கள் பார்த்துச் சேகரித்து, தனக்கும் பிறருக்குமாக எடுத்து வருவார்கள்.

இன்றைய "இண்டர்நெட்' யுகத்து வியாபாரிகள் புத்திசாலிகள்! அவர்கள் இந்த சாத்திர விதியை நன்கு அறிந்து வைத்திருப்பதால் தாங்கள் "ஆன் லைனில்' விற்கும் சாளக்ராமத்துக்கு இதுதான் "விலை' என்று குறிப்பிடாமல், "நன்கொடை' என்று போட்டு, முதல் கோணலுக்கு வழி வகுத்துவிட்டனர். ஒரு இயக்கமும், ஒரு சில "புத்திசாலிகளும்' சாளக்ராம லட்சணங்களைப் பற்றி கண்டு கொள்வதேயில்லை. இதனால் பக்தர்களுக்குத் தான் திண்டாட்டம்!

இவை ஒரு புறமிருக்க, "மந்திர தீஷை பெற்றவர்கள் மட்டுமே சாளக்ராம பூஜை செய்யலாம்' என்று பாத்ம புராணம் கூறுகின்றது. இதை எத்தனைப் பேர் கடைபிடிக்கின்றனர்? "முறையாகச் செய்யாத எதுவும், முறையான பலனைத் தராது என்பது மட்டுமல்ல; முரணான பலனைத் தந்துவிடும்' என்பதை ஏற்கெனவே இந்தப் பகுதியில் வலியுறுத்தியுள்ளோம்.

இதோ "ஸ்காந்த புராணம்' விடுக்கும் சில எச்சரிக்கைகளைக் கவனிப்போம்:

* கரடு முரடான சாளக்ராமத்தை வீட்டில் வைத்துப் பூஜித்தால் மனப்பதற்ற நோய் உருவாகும்.

* ரத்தச் சிவப்பு நிறமுள்ள சாளக்ராமம், பலவித வியாதிகளைத் தரும்.

* வடிவம் சரியற்றதாக இருக்கின்ற சாளக்ராமம், வறுமையில் தள்ளும்.

* மிகக் குண்டான சாளக்ராமம், லட்சணமற்றிருப்பின், பூஜிப்பவரின் ஆயுளைக் குறைத்துவிடும்.

* தீர்க்கமான மஞ்சள் நிறமுடையது, இரண்டு சக்கரங்கள் ஒட்டியிருப்பது, அளவுக்கு அதிகமான அகன்ற வாயுடையது, கோணலான முகவாயுடையது ஆகிய சாளக்ராமங்கள் இல்லத்தில் வைக்கப்படின் பல்வேறு துன்பங்களைத் தரும். அடுத்ததாக "அக்னி புராணம்' கூறும் அறிவுரைகளையும் பார்ப்போம்:

""நாகம் போன்ற முகவாய் உடையது, எதிரெதிராக சக்கரங்கள் உடையது, நீண்ட முதுகுப் பகுதியுடையது, மர நிறத்தில் (பலர் இதை நரசிம்ம சாளக்ராமத்தோடு குழப்பிக் கொள்வார்கள்) உள்ளது, மிக அதிகமான கோடுகளைக் கொண்டது போன்ற சாளக்ராமங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியின்மையை உருவாக்கிவிடும்; அல்லது எப்பயனும் தராது. இதுபோல் பல எச்சரிக்கைகளை (புத்திர சோகம் உள்பட) புராணங்களின் வாயிலாக நமது முனிவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

"சாளக்ராம பூஜையால் பெறும் புண்ணியத்துக்குச் சமம் எதுவுமில்லை' என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நல்ல சாளக்ராமத்தை தேர்ந்தெடுத்து பூஜித்துப் பயன் பெற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. மாறாக தோஷமுள்ள சாளக்ராமங்களை விலைக்கு வாங்கி, விபரீதங்களையும் சேர்த்தே வாங்க வேண்டாம் என்பதைத் தெளிவுப்படுத்தவே இவ்வளவு விரிவாகக் குறிப்பிடுகின்றோம்.

இன்றைய அவசர, வியாபார யுகத்தில் எதையாவது எழுதி, எதையாவது சொல்லி எதுவும் செய்வோர் ஆன்மீகத் துறையிலும் உள்ளனரென்பது வருந்தத் தக்கது.

"சாளக்ராம பூஜையே வேண்டாம்' என்பதல்ல நமது வாதம்.

நல்ல லட்சணங்கள் பார்க்கத் தெரிந்த உண்மையான பெரியோர்களின் துணையோடும் வழிகாட்டுதலோடும் சாளக்ராம பூஜை செய்தால் வைகுண்டமே கிடைக்கும். ஆயின் அப்படிப்பட்ட வாய்ப்பு எல்லோர்க்கும் எளிதில் கிடைத்துவிடாதல்லவா? அப்படி வாய்ப்பு அமையப் பெறாதவர்களையும் பரமாத்மாவாகிய ஸ்ரீவிஷ்ணு கைவிடுவதில்லை.

அத்தகு பக்தர்கள், திருமால் ஆலயங்களிலோ- தீஷை பெற்ற பெரியவர்களின் இல்லங்களிலோ கிடைக்கும் சாளக்ராம அபிஷேக தீர்த்தத்தைப் பருகுவதால் மட்டுமே, பூஜை செய்த பலனை முழுமையாக அடைந்துவிடலாம். இதில் சந்தேகம் தேவையில்லை. "அன்யேஷாம் தீர்த்த பானேன தத்பலம் சித்யதி ஸ்வயம்' என்று, "திவ்ய தேச வைபவம்' என்ற புனித கிரந்தம், இக்கருத்தினை தெளிவாகக் கூறுகின்றது.

முடிந்தால் நியதிகளோடு சாளக்ராம பூஜை செய்து சர்வேஸ்வரனின் அளவு கடந்த திருவருளைப் பெறுவோம்! இயலாவிட்டாலோ, சந்தேகமிருந்தாலோ விஷ்ணு ஆலய தீர்த்த பிரஸôதத்தாலோ, அல்லது உத்தம ஸ்ரீவைஷ்ணவர்களால் (ஸ்ரீ வைஷ்ணவர்களிடையே ஜாதி பேதமில்லை; அப்படிப் பார்ப்பவர் நரகம் புகுவர்) ஆராதிக்கப்படும் சாளக்ராம அபிஷேக தீர்த்தத்தாலோ அதே பயனை ஐயமின்றிப் பெற்றுய்வோம்.

இது கலியுகம். பாதுகாப்பான பாதையை நாமேதான் தேர்ந்தெடுக்க வேண்டும்! ஆர்வக் கோளாறுகளாலும், "அவர் சொன்னார், இவர் சொன்னார்' என்ற கண் மூடித்தனமான நம்பிக்கைகளாலும் அவதிகளை வரவழைத்துக் கொண்டு, பின்னர் ஆண்டவனை நிந்திப்பது பெரும் பாவம்!


Comments