ஏவல் பில்லி சூன்யம் உண்மையா ,பொய்யா ?

பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் ஆவிகளில் நல்லவை, தீயவை- என்ற இரண்டுமே மந்திரங்களின் சக்திகளுக்கு உட்பட்டவைகளே. அதாவது மந்திரங்கள் ஒரு வித ஒலியை வெளிப்படுத்த அந்த ஒலிக்கு கட்டுப்படுபவை ஆவிகள். மந்திர உச்சாடனையில் இருந்து எழும்பும் ஒலியை  அதிர்வு என்கிறார்கள். இந்த மாதிரியான மந்திரங்கள் நான் முன்னரே கூறி உள்ளபடி அதர்வன் வேதத்தில் உள்ளன. அ வை அபிசார மந்திரங்கள் எனப்படும். அந்த அபிசார மந்திரங்களைப் போலவே மேலும்  பல மந்திரங்கள் உள்ளன. மந்திரங்கள் என்பது வேத காலத்தில் இருந்தே உள்ளவை.  ஆனால் அந்த மந்திரங்களை சரியான முறையுடன் உச்சரிக்க வேண்டும். முறையாக ஓதப்படாத மந்திரங்களுக்கு சக்தி இல்லை. அது மட்டும் அல்ல, முறையாக ஓதப்படாத மந்திர  உச்சரிப்புக்களினால் அதை உச்சரித்தவர்களையே திருப்பித் தாக்கும் என்பார்கள்.  ஆகவே மந்திரம் என்பது சாதாரண விஷயமும் அல்ல. அந்த மந்திரங்களை உச்சரிக்கும்போது எழும்பும் ஒலிக் கற்றைகள் ஒரு ஒளி போல காற்றில் பறந்து சென்று அதிர்வு மூலம் அங்கு சுற்றித் திரியும் ஆவிகளை தாக்கி அவற்றை செயலிழக்கச் செய்யும். 


அதைத் தொடர்ந்து ஓதப்படும் மந்திரங்கள் அவற்றைக் கட்டி அந்த மந்திரத்தை ஓதியவரிடம் இழுத்துக் கொண்டு வந்து விட அவர்கள் அதை தம்மிடம் உள்ள மந்திரக் கூடுகளில் பிடித்து வைத்துக் கொண்டு விடுவார்கள் . இப்படியாகத்தான்  மந்திரவாதிகளிடம் பல தீய ஆவிகள் கட்டுண்டு கிடக்கின்றன. அப்படியென்றால் யார் வேண்டுமானாலும்  அந்த மந்திரங்களை ஓத முடியுமா என்றால் அது முடியாது. அதற்கு விசேஷ பயிற்சி தேவை. மேலும் அதற்கென உள்ள தேவதைகளை பூஜித்து  அதன் அருளைப் பெற்றாலே அது அந்த சக்தியை அதனை ஆராதித்தவர்களுக்குத் தரும். அந்த சக்தி தரும் தேவதைகளைப் படைத்தது யார்? முன்னரே கூறியபடி, தெய்வங்கள், தேவதைகள் என்ற அனைத்தையும் படைத்தது மூன்று அவதாரங்களின் வழித் தோன்றல் அவதாரங்களே.  நல்லவை உள்ள இடத்தில் தீமைகளும் இருக்க வேண்டும் என்பது நியதி என்பதினால் நல்ல தேவதைகளுக்கு மத்தியில் தீய தேவதைகளும் படைக்கப்பட்டு உள்ளார்கள். ஆனாலும் அந்த தீய தேவதைகள் பல நல்ல மனமுடைய அவதாரங்களுக்குக் கட்டுப்பட்டவை. அவற்றினால் அவதாரங்களாய் மீறி எதையும் செய்ய முடியாது. அதனால்தான் செய்வினைகள் நம்மைத் தாக்காமல் இருக்க கால பைரவர், ஹனுமான் போன்றவர்களை வணங்குமாறு அறிவுறுத்துவார்கள்.

தீய தேவதைகள் மயானங்களில் பெரும்பாலும் தங்கி இருக்கும். அதுவும் அகால மரணம் அடைந்து சிதைகளில் எரிக்கப்படும்போதும், புதைக்கப்படும்போதும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அந்த உடலின் கபாலத்தில் இருந்து ஆத்மாக்கள் முற்றிலும் வெளியேறும். அப்போது அங்குள்ள தீய தேவதைகளின் ஆதிக்கத்தில் அவை விழுந்து விடும். ஆனாலும் அவற்றை அந்த தேவதைகளினால் அங்கு ஒன்றும் செய்ய முடியாது. அந்த ஆத்மாக்கள் மேலுலகை நோக்கிச் செல்லத் துவங்கும்போது அந்த ஆத்மாக்களை தொடர்ந்து இந்த தீய தேவதைகளும் சென்று கொண்டு இருக்கும். போகும் பாதையில் அவை ஏமார்ந்தால் அவற்றை தன் வசம் இழுத்து வந்துவிடும்.  இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், தீய ஆவிகளும், துர்தேவதைகளும் பெண்ணினத்தை சேர்ந்தவையாகவே உள்ளன!!!  அது ஏன் என்பதை பின்னர் ஒரு கட்டுரையில் விரிவாக விளக்குகின்றேன்.

 பெண்ணின் தீய ஆவி 

மந்திரவாதிகள் இத்தகைய தீய தேவதைகளை ஆராதித்தே பல ஆவிகளை  பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். அவற்றை எப்படி பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் என்பதை மேலே விவரித்து உள்ளேன். மந்திரவாதிகளிலும் நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என  இரண்டு வகையினர் உண்டு. மந்திரவாதிகளை மக்கள் அணுகுவதின்  காரணங்கள்:-

வறுமை நீங்க வேண்டும்
தொழில் நன்கு செழிக்க வேண்டும்
திருமணம் நிறைவேற வேண்டும்
இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வேண்டும்
வேலைக் கிடைக்க வேண்டும்
காதலில் வெற்றி பெற வேண்டும்
தனக்கு தொல்லைகளை தருபவர் அழிய வேண்டும்  
தமக்குள்ள நோய் நொடிகள் தீர வேண்டும்
சொத்துத் தகராறில் குறிப்பிட்ட ஒருவர் அழிய வேண்டும் (மரணம் அல்ல)
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் அழிய வேண்டும்
வேறு காரணங்களினால் குறிப்பிட்டவர் மன நிலை பாதிப்பு அடைய வேண்டும்
குறிப்பிட்டவர் விரைவில் அகால மரணம் அடைய வேண்டும்

இப்படியான பலவித  எண்ணங்களுடன் அவர்களை அணுகும்போது அவர்கள் கொடுக்கும் பணத்திற்கேற்ப மந்திரவாதிகள் நன்மைகளையோ அல்லது தீமைகளை செய்யத் தவறுவது இல்லை. அவர்களால் அனைவருக்கும் அந்த தீமைகளை ஏற்படுத்த முடியுமா என்றால் அது முடியாது என்றே கூற வேண்டும். மந்திரவாதிகளை மட்டும் அல்ல பலவித சாதுக்களையும், ஆன்மீகவாதிகளையும் மக்கள் இதற்காக அணுகுகிறார்கள். அவர்களும் தம்மை நாடி வருபவர்களுக்கு மந்திர ஆராதனை செய்யப்பட்ட சில யந்திரங்களையும், தாயத்துக்களையும் தருகிறார்கள்.  அவற்றுக்குள்ளும் மந்திரம் ஓதப்பட்ட சில பொருட்களே உள்ளன. ஆக அனைத்துமே மந்திரங்களின் அடிப்படையில்தான் - தேவதைகளின் மூலமே-  இயங்குகின்றன. அதில் உள்ள தேவதைகள் நல்லவையா அல்லது துர்தேவதிகளா  என்பது வேறு விஷயம்.  தீய ஆவிகளைக்  கொண்டு யாருக்கு பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும்?

யாருடைய கிரஹ நிலை மோசமாக, பலவீனமாக உள்ளதோ அவர்களுக்கு
யாருடைய உடல்நிலை நன்றாக இல்லையோ அவர்களுக்கு
யாருடைய மனநிலை குழப்பமாக உள்ளதோ அவர்களுக்கு
தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு
கர்ம வினை உள்ளவர்களுக்கு
மற்றும் அதிக அளவில் பெண்களுக்கு

ஆமாம் செய்வினை வைக்க என்ன செய்கிறார்கள்? முதலில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவர்களுடைய புகைப்படம், அவர்கள் பயன்படுத்தும் ஏதாவது சிறிய துணிமணிகள், பொருட்கள் (அதாவது அந்த நபர் தொட்டவை), அவர்கள் நடந்து சென்ற இடத்தின் பூமி மண் (அதன் மீது மற்றவர்கள் நடக்கும் முன்) , அல்லது அவர்களின் தலை முடி போன்றவற்றைக் கொண்டு வரச்சொல்லி அவற்றை ஒரு பொம்மையுடன் சேர்த்துக் கட்டி அந்த பொம்மைக்கு தீய ஆவியின் மந்திரம் ஏவி அதைப் புதைத்து விடுவார்கள். அவ்வளவுதான். அதைப் புதைத்தவுடன் அந்த ஆவி யாருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவர்கள் உள்ள இடத்தை அடைந்து அவர்களை தாக்கத் துவங்கும். இதற்கு மரத்திலான பொம்மைகளையே பயன்படுத்துகிறார்கள். காரணம் மண்ணினால் செய்த பொம்மைகள் புதைக்கும் போது உடைந்து விட்டால், அல்லது புதைத்த இடம் யார் செய்வினை செய்தார்களோ அவர்கள் வீட்டின் அருகில் இருந்தால் அவை யார் செய்வினை வைத்தார்களோ அவர்கள் மீதே பாய்ந்து விடும். உடையாமல் இருக்கும்வரைதான் யாருக்கு வைக்கப்பட்டதோ அவர்களை சென்று தாக்கும். உடைந்து விட்டலோ எதிர்மறையாகி விடும்.

 அந்த தீய ஆவிகள் எப்படித் தாக்குகின்றன? யாரை அது தாக்க வேண்டுமோ அங்கு சென்று அந்த ஆவிகள் ஒருவித ஒலியை ஏற்படுத்தி அவற்றை அவர்களுடைய மூளையில் செலுத்தும். அது அனைவருக்கும் கேட்காது. அந்த ஒலிகள் பாதிக்கப்பட்டவரின் மூளைக்குள் புகுந்து கொண்டவுடன் அவர்களது சிந்திக்கும் திறனை உடனடியாக நிறுத்தி விட்டு வேறு எதை எதையோ செய்யுமாறு கட்டளை இட்டபடி இருக்கும். அவர்களும் மூளையில் இருந்து கிடைக்கும் கட்டளைக்கு ஏற்ப கோமாளித்தனமான , பயங்கரமான, பல தீய காரியங்களை செய்யத் துவங்குவார்கள். அது மட்டும் அல்ல அந்த தீய ஆவிகள் அவ்வப்போது தமது சக்தியை அவர்களுக்குள் செலுத்தி வருவதினால்  அந்த நேரங்களில் அவர்களின் சக்தி அளவற்று அதிகரித்து முரட்டுத் தனமாக இருப்பார்கள். நம்முடைய சக்திக்கும் மீறி அவர்களது உடலின் சக்தி அதிகமாக இருக்கும். தீய ஆவிகள் மற்றுள் சிலரது நரம்புகளில் புகுந்து கொண்டு அவற்றை முறுக்கும்,  நெற்றிப் பொட்டில் அடித்துக் கொண்டே இருக்கும் (அனைத்துமே ஒலி அலைகள் மூலம்). 

இப்படியாக செய்து அவர்களை முழுமையாக செயல் இழக்க வைத்து நல்ல உடல் நலத்தை நாசமாக்கி விட அவர்கள் உடலில் சக்தி இல்லாமல், யோசனை செய்யக்கூட சக்தி இல்லாமல் ஒடிந்து போவார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுடன் வீடுகளில் தீய ஆவிகளும் நுழைந்து விடும். அந்த தீய ஆவிகள் நுழையும் வீடுகளில் உள்ளவர்களை நிம்மதி இல்லாமல் செய்துவிடும். பொருட்களை கீழே விழ வைக்கும்.  அவ்வபோது பீதி கலந்த சூழ்நிலையை உருவாக்கும். செய்வது அனைத்துமே நஷ்டத்தில் போய் முடியும் வகையில் யாராவது மூலமாவது அவற்றை செய்யும். வியாதி இல்லாதவர்களுக்கு இல்லாத பொல்லாத வியாதிகளை வரவழைக்கும். 

அந்த நிலை முடிவில்லாமல் தொடர்ந்து இருக்குமா? அதுவும் கிடையாது. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் துஷ்ட சக்தியும் இருக்கும். அது போய் விட்டால் அந்த ஏவலும் தானாகவே போய் விடும். அதனால்தான் ஏவலை வைப்பவர்கள் பல காலம் இருக்கும் வகையில் ஏவல்களை வைப்பார்கள். மிஸ்டிக் செல்வம் என்பவர் ஒரு கட்டுரையில் இப்படியாக குறிப்பிட்டு உள்ளார் : ''ஆவிகளின் ஆயுட் காலம் எந்தக் கணக்கிற்கும் அகப்படாத ஒரு புரியாத புதிராகவே இருக்கும் என்று தோன்றுகிறது. பாவ புண்ணியங்களின் அளவில் சொர்க்க நரகங்கள் தீர்மானிக்கப்பட்டால் அவைகளில் வாசம் புரியும் காலம் பிறப்புக் கடவுகளின் கையிலேயே இருப்பது புரிகிறது. யாருக்கு எப்போதும் பூமி வாசம் கொடுக்க வேண்டும் என்று அவன் கருதுகிறானோ அதுவரை ஆவிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆனாலும் கூட சூட்சம் தேகத்திலேயே வாழும்படி நேரிடுகிறது. அப்படி வாழ்வது தண்டனையா சன்மானமா என்பது நமக்குப் புரியவில்லை. அதைக் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் நமக்கு இல்லை.'' 

அதே நேரத்தில் நல்லெண்ணம் படைத்த மந்திரவாதிகளும் உண்டு. அவர்களின் வேலை மேலே கூறிய அனைத்து தீய செயல்களுக்கும் பரிகாரம் செய்து அவற்றின் மூலம் நிகழும் தீமைகளை அழிப்பதே. அவர்களும் அதற்காக நல்ல தேவதைகளின் ஆராதனை மந்திரங்களை  உச்சரித்தவண்ணம்  தீய ஆவிகளை விரட்டி அனுப்புவார்கள்.  துரதிஷ்டவசமாக எந்த மந்திரவாதியின் மந்திர சக்தி அதிக வலிமையானதோ அவர்களுடைய முயற்சியே வெற்றி பெரும் என்பது புலனாகும்.


Comments